சென்னை: பெரியார் சிலையை அவமதிப்பவர்களைத் தண்டிப்பதில் மெத்தனம் வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலைக்கு சனிக்கிழமை இரவு (8.1.2022) அடையாளம் தெரியாத சிலர் செருப்பு மாலை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவைக் கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பல்வேறு தலைவர்கள் இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''கோயம்புத்தூர் - வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலைக்கு சனிக்கிழமை இரவு (8.1.2022) கயவர்கள் செருப்பு மாலை போட்டுள்ளனர். தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகள் - தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது - கயவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது.
கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் குற்றவாளிகள் மனநோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப்படும் போக்கு - காவல்துறையின் நடைமுறையாகவும் ஆகிவிட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் என்றும், இந்த அரசு பெரியார் கொள்கை வழி செயல்படும் அரசு என்றும், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதும், சமூக நீதியில் நமது முதல்வர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்க வேண்டும்.
முதல்வர் - முக்கியமாக இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு (காவல்துறை முதல்வரின் துறை) குற்றவாளிகள் - அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதான நடவடிக்கை - தண்டனையைச் சரியான வகையில் எடுத்து விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான் - இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று சிலர் முயல்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்''.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.