சென்னை: கரோனா பரவல் காரணமாக, ஜன.21-ம் தேதி தொடங்க இருந்த பருவத் தேர்வுகளை சென்னைபல்கலைக்கழகம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
நேரடி பருவத் தேர்வுகள் ஜன.21-ம் தேதி முதல் நடத்தப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதற்கிடையே, கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அதிகரித்து வருகிறது. மருத்துவம் தவிர்த்த அனைத்து கல்லூரிகளுக்கும் ஜன.20 வரைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருவத் தேர்வு நடத்துவது குறித்து சூழலுக்கேற்ப பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யலாம் என்றும் அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், தொற்று பரவல்தீவிரமடைந்துள்ளதால் பருவத் தேர்வுகளை தள்ளிவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலை.யின் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘அரசு அறிவுறுத்தலின்படி, ஜன.21-ம் தேதிதொடங்க இருந்த பருவத் தேர்வுகளும், தற்போது நடந்துவரும் செய்முறைத் தேர்வுகளும் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகின்றன. கரோனா பரவல் சூழலை ஆராய்ந்து, மாற்றுத் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.