சென்னை: தமிழகத்தில் முன்களப்பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவில் கூறியிருப்பதாவது:
முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைஎம்ஆர்சி நகரில் உள்ள இமேஜ் அரங்கில் ஜன. 10-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் மொத்தம் 5.65 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், 9.78 லட்சம் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயது கடந்தவர்களில் 20.83 லட்சம் இணைநோய்உள்ளவர்கள் என மொத்தம் 36.26 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ்தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதம் ஆனவர்கள் அல்லது 273 நாட்கள் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
தற்போது, முதல் நாளில் 4 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிபோட தகுதியானவர்கள் உள்ளனர். மத்திய அரசின் வழிமுறைகளின்படி, ஏற்கெனவே இரண்டுதவணைகளாக செலுத்திக் கொண்ட அதே தடுப்பூசியை தான் (கோவாக்சின், கோவிஷீல்டு) பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
எந்தவிதமான சான்றிதழும் தேவையில்லை. செல்போன் எண், ஏதாவது ஒருஐடி கார்டு இருந்தால் போதுமானது. கோவின் இணையதளத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதம் அல்லது 273 நாட்கள் முடிந்துள்ளதா என்பதை சரிபார்த்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் ஆலோசனை தேவைப்படுவர்கள் எடுத்துக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர்களாகவே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசிபோட்டுக் கொண்டால் தீவிரமான நோய் பாதிப்பு வருவதில் இருந்தும் இறப்பில் இருந்தும் கண்டிப்பாக தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருநாள் ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில்நிலையம் அருகில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மேலும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் நடத்தவுள்ளார். இதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு புதிய கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் அறிவிப்பார்” என்றார்.