தேனி: தேர்தல் வேட்பு மனுத் தாக்கலில் சொத்துஉள்ளிட்ட பல விவரங்களை மறைத்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ப.ரவீந்திரநாத் எம்பி மீது சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமாக தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இங்கு தேனி மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி கடந்த 30-ம் தேதி தேனியில் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், கடந்த மக்களவை தேர்தலில் ப.ரவீந்திரநாத்தும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சொத்து, கடன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மறைத்து மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.