கட்சிப் பணியாற்ற இருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டா முத்தூர் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட் பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: திமுக, அதிமுக கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் பொய் சொல்லி வருவதை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் பொய்ப் பிரச்சாரம் இத்தேர்தலில் எடுபடாது. மது ஆலைகளினால் ஆயிரக்கணக்கான கோடி வருவாய் ஈட்டி வரும் திமுக, அதிமுகவினர், முதலில் மது ஆலைகளை மூடிவிட்டு, அதன் பிறகு மதுவிலக்கு குறித்து பேச வேண்டும். இவ்விரு கட்சிகளிலும் ஊழல் செய்தவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கொமதேக வேட்பாளர் பட்டியல் முழுமையடையும்.
திமுக, அதிமுக மீது மக்களுக்கு உள்ள கோபத்தை, நம்பி நாங்கள் இத்தேர்தலை எதிர் கொள்கிறோம். கொமதேக போட்டியிடும் 72 தொகுதிகளில், நிச்சயமாக 25 தொகுதிகளில் வெற்றியடையும். நான் தேர்தல் பணியாற்ற இருப்பதால், போட்டியிடப்போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.