ஆலந்தூரான்பட்டி துணை மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள ஆலந்தூரான்பட்டியில் துணை மின்நிலையம் உள்ளது. இங்குள்ள 110 கி.வா. மின்மாற்றி நேற்று காலை திடீரென வெடித்தது. இதில் தீ மளமளவென பரவி பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது.
திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் நகரில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக கன்னிவாடி, பழைய கன்னிவாடி, மாங்கரை, முத்தனம்பட்டி, கோம்பை அம்மாபட்டி, தர்மத்துப் பட்டி, ஆலந்தூரான்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின்மாற்றி வெடித்ததற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மின் விநியோகத்தை சீரமைப்பதற்கான பணியை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.