புதுக்கோட்டையில் ஊரடங்கு தொடர்பாக சைக்கிளில் சென்று ஆட்சியர் கவிதா ராமு நேற்று ஆய்வு செய்தார்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டையில் ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்கின்றனரா என்பதை அறிய தனது முகாம் அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சைக்கிளில் சென்று ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, ஒரு தனியார் தங்கும் விடுதி வாசலில் முகக் கவசம் அணியாமல் நின்று பேசிக்கொண்டிருந்தோரிடம் ஏன் முகக் கவசம் அணியவில்லை என கேட்டு, முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது என அறிவுரை கூறி, அவர்களுக்கு முகக் கவசம் வழங்கினார்.
பின்னர், அங்கிருந்து அண்ணா சிலை, கிழக்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, பால் பண்ணை, அரசு மகளிர் கல்லூரி வழியாக மீண்டும் முகாம் அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்றார். தன்னைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போன்ற எவ்வித படை பட்டாளமுமின்றி தனியொருவராக 3.5 கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளில் சென்று ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தது அனைவரையும் வியப்படையச் செய்தது.