தமிழகம்

பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டம்: வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை நீக்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்கள்:

நீட் விஷயத்தில், தற்போது எடுக்கப்பட உள்ள சட்டரீதியான நடவடிக்கை எந்த அளவுக்கு பலன் அளிக்கும்?

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாததால், முதலில் மருத்துவத் துறையினரும், அதன்பின் முதல்வரும் ஆளுநரை சந்தித்து வலியறுத்தினர். அதற்குப் பிறகும் அனுப்பப்படவில்லை. எனவே, மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் பாதிப்பில்லை என வானதி சீனிவாசன் கூறுகிறாரே?

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத மருத்துவக் கல்வி வாய்ப்பு இருந்ததாகவும், தற்போது 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும் நீதிபதி ஏ.கே.ராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில்இருந்து விலக்கு பெறுவது என்பது அனைவரின் விருப்பமாகும். முன்னதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து நீட் தேர்வு குறித்து பேசியபோது, நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்து தனது ஒடிசா மாநிலத்திலும் உள்ளது.இதில் அரசியல் உள்ளதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். நீட் தேர்வுக்கான எதிர்ப்பு அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. இதை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அனைத்து கட்சிகளின்தலைவர்களும் ஈடுபட வேண்டும்என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?

அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீர்மானத்துக்கு முழு ஆதரவை தெரிவித்தார். அவர்தான், மீண்டும் ஒருமுறை உள்துறை அமைச்சரை சந்திக்கலாம் என்றார். இதை ஏற்றமுதல்வர், மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மசோதாவை ஆளுநர் அனுப்ப தாமதம் ஆவதற்கு, அவருக்கு இருக்கும் சந்தேகம் காரணமாக இருக்கலாம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளாரே?

அவரது சந்தேகத்தை சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்டோர் தீர்த்து வைத்துவிட்டனர். சந்தேகம் ஏதாவது இருந்தால் அடுத்த நிமிடமே சட்ட வல்லுநர்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதில் அனைத்துக் கட்சியினரின் கருத்து என்ன?

மீண்டும் உள்துறை அமைச்சரை சந்திப்பது, சட்ட வல்லுநர்களுடன் பேசி, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது, பின்னர் மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT