தமிழகம்

கோடநாடு வழக்கில் அரசியல் கட்சியினர் பின்னணி குறித்து 5 பேரிடம் மீண்டும் விசாரணை

செய்திப்பிரிவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் கட்சியினரின் பின்னணி குறித்து, கைதாகி பிணையில் உள்ள 5 பேரிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப். 24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர்(50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, நீலகிரி மாவட்டப் போலீஸார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் பிணையில் உள்ள தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின், ஜிஜின் ராய் ஆகியோரை கேரளாவில் இருந்து கோவைக்கு நேற்று அழைத்து வந்த தனிப்படை போலீஸார், அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் வைத்து நேற்று காலை முதல் 5 பேரிடமும் மீண்டும் விசாரித்து வருகின்றனர். கோடநாடு சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பேரம் பேசியதாக, இவர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். பேரம் பேசிய அரசியல் கட்சியினர் யார், என்ன பேரம் பேசப்பட்டது, இதற்கு உறுதுணையாக, இடைத்தரகர்களாக இருந்தவர்கள், அரசியல் கட்சியினரின் பின்னணி உள்ளதா, அவர்கள் யார் என்பது குறித்தும், கோடநாடு சம்பவம் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீஸார் 5 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT