தமிழகம்

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டார். இதனால் சைக்கிள் பயணம் செல்வதை தவிர்த்து வந்த முதல்வர் ஸ்டாலின், தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று சைக்கிள் பயணம் மேற்கொண்டார். நீலாங்கரையில் உள்ள தனது மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து நேற்று அதிகாலையில் சைக்கிளில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவிடந்தை, வடநெம்மேலி வழியாக சுமார் 19 கி.மீ. பயணித்து, மாமல்லபுரத்தை அடைந்தார். இடையில் சிறிய டீக்கடையில் அமர்ந்து, டீ அருந்தியவாறு சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது அந்தக் கடைக்கு வந்த ஒரு சிறுவனிடம் "என்ன படிக்கிறாய்? எந்தப் பள்ளியில் படிக்கிறாய்? ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறாயா அல்லதுநேரடியாக பள்ளிக்குச்செல்கிறாயா? என்று கேட்டு, அச்சிறுவனுடன் கலந்துரையாடினார்.

முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை அறிந்தஏராளமான பொதுமக்கள் சாலையோரம் நின்று, அவருக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தவாறே சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது சபரீசனும் சைக்கிளில் சென்றார்.பின்னர் முதல்வர் ஸ்டாலின் மாமல்லபுரத்திலிருந்து காரில் வீடு திரும்பினார்.

SCROLL FOR NEXT