தமிழகம்

‘பொறியியல் புரட்சிகள்’ நூல் வெளியீட்டு விழா; வரலாறுகளை இளைஞர்கள் அறிந்துகொள்வது அவசியம்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்வதற்கு இளைஞர்கள் முந்தைய வரலாறுகளை அறிந்து கொள்வது அவசியம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

தேசிய வடிவமைப்பு மற்றும்ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எப்) இயக்குநரான ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு அறிவியல் தொழில்நுட்பம் குறித்தபல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அதன்படி தேசிய அளவில் வளர்ச்சியை கட்டமைத்த அறிவியல் தொழில்நுட்ப நிகழ்வுகள் தொடர்பாக ‘பொறியியல் புரட்சிகள்’ என்ற தலைப்பிலான நூலை டில்லிபாபு எழுதியுள்ளார்.

இதன் வெளியீட்டு விழா இணையவழியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: நம்நாடு சுதந்திரம் பெற்று75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள சூழலில், இன்று நாம் உண்ணும் உணவுகளில், பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்குபின் பல்வேறு அறிவியல் புரட்சிகள் நடைபெற்றுள்ளன. 1960-ம் ஆண்டுகளில் நம்நாட்டில் நிலவிய உணவு தட்டுப்பாடு பசுமை, வெண்மை புரட்சிகளால் மாற்றி அமைக்கப்பட்டது. அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்திலும் பல போராட்டங்களுக்கு பின்னரே வளர்ச்சி அடைந்துள்ளோம்.

அத்தகைய நிகழ்வுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம்.அதை இந்த புத்தகம் சிறப்பாக செய்துள்ளது. இயற்கை பேரிடர்களை நம்மால் எதிர்கொள்ள முடிவதன் பின் மறைந்துள்ள தொழில்நுட்பங்களின் உதவியை புரிந்துகொள்ள வேண்டும்.

நம்நாட்டின் எல்லைப்பகுதிகளை மட்டுமின்றி இறையாண்மையை பாதுகாப்பதற்கு வேளாண் முதல் விண்வெளி வரை நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். மற்றநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை தவிர்க்க வேண்டும். இந்தஅறிவியல் புரட்சிகள் முந்தையகாலச்சூழலுக்கேற்ப நடைபெற்றவை. தற்போது விவசாய பரப்பின் நிலம், தண்ணீர் அளவு, தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மறுபுறம் நாட்டின் மக்கள்தொகை தொடர்ந்து உயர்கிறது. எனவே, அறிவியல் புரட்சிகள் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. எதிர்கால தேவைகளை உணர்ந்து அவற்றை பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பும் இளைஞர்களின் கைவசமுள்ளது. அதற்கு நமது முந்தைய வரலாறுகளை அறிந்து கொள்வது அவசியமாகும். அதற்கு இந்த நூல் உதவிகரமாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்வுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். நூல் ஆசிரியரான விஞ்ஞானி வி.டில்லிபாபு, எழுத்தாளர்கள் திலகவதி ஐபிஎஸ், பிரியசகி, ஆளுமைச் சிற்பி மாத இதழ் ஆசிரியர் மெ.ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT