மது பழக்கத்தால் இந்திய அளவில் நிமிடத்துக்கு 6 பேர் இறக்கின்றனர் என்றும், இதில் 18 சதவீதம் பேர் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தவிர, இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமை ஆகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பார்ட்டி என்றாலே 5-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஒன்றாக குழுமி நலம் விசாரித்து இனிப்பு, காரம், காபி வகைகளையும், உணவு பதார்த்த வகைகளையும் உட்கொள்வதாகவே இருந்து வந்தது. அதில் வெகுசிலரே மதுபானங்களை அருந்துவர். ஆனால், தற்போது பார்ட்டி என்றாலே மதுவிருந்து என்றாகிவிட்டது. 100 பேர் மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்றால், அதில் 75 பேர் ஆண்கள், எஞ்சிய 25 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.
பொதுவாக மதுபானங்களுக்கு முதலில் அடிமையாகும் நபர்களே கஞ்சா, அபின், கோகைன், போதை மாத்திரைகள் போன்ற போதை வழக்கங்களுக்கும் அடிமையாகி வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பது சம்பிரதாய வாசகமாகவே இருந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2003-ம்ஆண்டுமுதல் மதுபான விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 2005-06-ல் ரூ.7,335 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், 2011-12-ல் ரூ. 21,680 கோடியாகவும், 2016-17-ல்ரூ.31,243 கோடியாகவும், 2020-21-ல் ரூ.33,811 கோடியாகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக புத்தாண்டு மற்றும் தீபாவளி நேரங்களில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மதுபோதையால் ஆண்டுக்கு 30 லட்சம் பேரும், நிமிடத்துக்கு 6 பேரும் இறப்பை சந்தித்து வருவதாகவும், இதில் 18 சதவீதம் பேர் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுப்பதாகவும், 27 சதவீதம் பேர் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தவிர, இந்தியாவைப் பொறுத்தவரை மதுபோதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்போது 5 மடங்காக அதிகரித்துள்ளது என்றும், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 2.2 கோடி பேர் மதுப்பிரியர்களாக உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மனநல ஆலோசகரும், சென்னை வளசரவாக்கம் ஜீவரக்ஷை குடிபோதை மற்றும் மனநல மறுவாழ்வு மைய நிர்வாக இயக்குநருமான ஏ.சி.என்.அருணா கூறியதாவது: இந்தியாவில் பஞ்சாப், டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக கேரளா, தமிழகம், ஆந்திராவில் மதுபான விற்பனை அதிகமாக உள்ளது. இதில் குறிப்பாக 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களே எளிதாக மது பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.
மது, கஞ்சா, அபின்,கொகைன் மற்றும் பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்களில் 48 சதவீதம் பேருக்கு கல்லீரல் தொடர்பான நோய்களும், 26 சதவீதம் பேருக்கு வாய் புற்றுநோயும், 26 சதவீதம் பேருக்கு கணையம் தொடர்பான நோய்களும், 20 சதவீதம் பேருக்கு காச நோயும், 7 சதவீதம் பேருக்கு இதய நோயும், 5 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயும், பெரும்பாலானோருக்கு நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் அதாவது வரும் 2027-ம் ஆண்டு இந்திய இளைஞர்களின் ஆரோக்கியம் என்பது இன்னும் கேள்விக்குறியாகிவிடும்.
எங்களது ஜீவரக்ஷை அமைப்பின் மூலமாக மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கும், மொபைல் போன்களின் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மீளமுடியாமல் உள்ள உள்ள சிறுவர், சிறுமியருக்கும் மருத்துவ நிபுணர்களைக் கொண்டும், மனநல ஆலோசகர்களைக் கொண்டும் தீர்வளித்து வருகிறோம்.
சில குடும்பங்களில் கணவர் குடிப்பதை நியாயப்படுத்தும் பெண்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் தங்களது குடும்பத்துக்கான ஆபத்தை உணராமல் உள்ளனர். தவிரபாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், மறுவாழ்வுக்கான உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறோம், என்றார்.