உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். மற்ற மாநிலங்களிலும் எங்களது வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. உத்தராகண்ட், கோவாவில் காங்கிரஸ் வலுவாக உள்ளது.
தற்போதைய தமிழக ஆளுநர் முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அவரை ஒரு குழுவினருடன் பேசுவதற்காகத்தான் நாகாலாந்து ஆளுநராக அனுப்பினர். அது தோல்வி அடைந்ததால் தண்டனையாக தான் தமிழகத்துக்கு அனுப்பியுள்ளனர். அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவத்துக்கு மாணவர்களை தேர்வு செய்யும்போது நாமக்கல் தனியார் பள்ளி மாணவர்கள் தான் அதிக அளவில் தேர்வாகினர். நீட் தேர்விலும் தனியார் பள்ளி மாணவர்கள் தான் அதிக அளவில் தேர்வாகின்றனர்.
இந்நிலையில், இட ஒதுக்கீட்டால் தான் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர். இதனால் நீட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இடஒதுக்கீடு முறை தொடர வேண்டும். நீட் தேர்வை தமிழ் தேசியத்துடன் இணைத்துப் பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.