ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டி.ஜெயக் குமார், பிரச்சாரத்தின்போது தொண்டர்களின் களைப்பை போக்க எம்ஜிஆர் பாடல்களைப் பாடி உற்சாகப்படுத்தினார்.
ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவர் அதிமுக எம்எல்ஏவான டி.ஜெயக்குமார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து டி.ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் குடிநீர் குழாய்களை இயக்கி பொதுமக்களுக்கு குடிநீர் பிடித்துக் கொடுப்பது, குழந்தைகளைத் தூக்கி கொஞ்சுவது, யாராவது ஆரத்தி எடுத்தால் அவர்களுக்கே திலகமிடுவது என்று வாக்காளர்களுடன் நெருக்கமாக பழகி வாக்குகளைத் திரட்டி வருகிறார்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று காலை 6 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பகல் 12 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின்போது களைப்படைந்த தொண்டர்களை உற்சாகப்படுத்த, எம்ஜிஆர் படங்களில் இடம்பெற்ற “நான் ஏன் பிறந்தேன்?” என்ற பாடல் உட்பட பல்வேறு பாடல்களைப் பாடினார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறிய டி.ஜெயக்குமார் ”நான் பாடகன் இல்லை. இதுநாள் வரை எம்ஜிஆர் பாடல்களை கேட்டு ரசித்து வருகிறேன். அதை அப்படியே இங்கு பாடினேன். விவசாயிகளும், மீனவர்களும், தங்கள் வேலையின்போது, வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக நாட்டுப்புற பாடல்களை பாடுவது வழக்கம். அதுபோலத்தான் நானும், காலையில் இருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக எம்ஜிஆர் பாடல்களை பாடினேன்” என்றார்.