புதுச்சேரி: புதுச்சேரியில் ஒமைக்ரான் அறிகுறி தென்பட்ட 140 பேரின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒமைக்ரான் அறிகுறி தென்பட்ட 140 பேரின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி எல்லைகளில் திங்கள் முதல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது,
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு இன்று (ஜன.8) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரியில் கடந்த 3-ம் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்டு வருகிறோம். இதுவரை 18 ஆயிரத்து 760 மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதாரக் குழு ஒவ்வொரு பள்ளியாகச் சென்று தடுப்பூசி போட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்தப் பணியை முடிக்க முயற்சி செய்து வருகிறோம். கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதனால் மக்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை. கரோனா பரவலைத் தடுக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தாலே புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கும். தடுப்பூசி போடாதவர்கள் தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது மார்பு நோய் மருத்துவமனையில் 33 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் தடுப்பூசி போடாதவர்கள். 3 பேர் ஊசி போட்டவர்கள். அவர்கள் வயதானவர்கள் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊசி போட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு வந்தாலும் காய்ச்சல், சளி, இருமலுடன் போய்விடும். நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் இருக்காது. அதனால் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புதுச்சேரியை 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்ற உதவ வேண்டும். புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது. எனவே, திங்கள் (ஜன.10) முதல் காவல் மற்றும் வருவாய்த் துறையுடன் சுகாதாரத் துறையும் இணைந்து வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு மாநில எல்லைகளில் ரேபிட் பரிசோதனை செய்யப்பட உள்ளது. பாசிடிவ் உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிப்போம்.
ஒமைக்ரான் அறிகுறி தென்பட்ட 140 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை முடிவுகள் வரவில்லை. ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி வீட்டை விட்டு வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.
அதேபோல், பாதிப்பு அதிகம் உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் அதிகம் பாதிப்பு இல்லை. எனவே, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரும் வெளியே சுற்றக் கூடாது.''
இவ்வாறு இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்தார்.