மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறவியிலேயே செவித்திறனற்ற 163 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகத் தற்போது பேசும் திறன் பெற்றனர். அக்குழந்தைகள் மருத்துவர்கள் முன்னிலையில் பாட்டுப் பாடி, நடனம் ஆடியது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது.
இதுகுறித்து இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரெத்தினவேல் கூறுகையில், ''மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு தொண்டை சிகிச்சைப் பிரிவின் மூலமாக பிறவியில் செவித்திறன் இல்லாத 163 குழந்தைகளுக்கு இதுவரை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மூலமாக செவித்திறன் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.
குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதோடு, காது கேட்கும் கருவி மற்றும் உரிய பயிற்றுநர்கள் மூலமாகப் பேச்சுப் பயிற்சிகளை வழங்கி பேச்சுத் திறன் பெற வைத்துள்ளோம். இதன் மூலம் ரூ.10 கோடியே 72 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காகத் தற்போது 550 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் மீது அதீத கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் தனியாக 100 படுக்கையுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்குப் போதுமான அளவிற்கு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. தொடர்ந்து பேசிய மருத்துவமனை முதல்வர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மீது இரக்கப்பட்டாவது பொதுமக்கள் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் சிறப்பாக அளித்துவரும் நிலையில் பொதுமக்கள் தயக்கமின்றி அரசு மருத்துவமனைக்கு வருகை தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் பெற்ற சிறுவர்களுடன் மருத்துவர்கள் உரையாடல் நிகழ்த்திக் காட்டியதோடு, செவித்திறன் பெற்ற குழந்தைகள் டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் பாடல் பாடி அசத்தினர்.
செவித்திறன் குறைபாட்டால் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற கவலையில் இருந்த பெற்றோர்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் தற்போது தங்கள் குழந்தைகள் மறுவாழ்வைப் பாட்டுப் பாடி நடனம் ஆடியதைக் கண்டு கண்ணீர் மல்க மருத்துவர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
பேட்டியின்போது காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவுத் தலைவர் என்.தினகரன் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.