சென்னை: நீட் விலக்கு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ,சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.
நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி:
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார். வரைவுத் தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தின் அனைத்துக் கட்சியினரும் தங்களது கருத்துகளைக் கூற வேண்டும். சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை மதித்து ஆளுநர் ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம்" எனத் தெரிவித்தார்.
பாஜக வெளிநடப்பு:
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியின் ஆகியோர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாலிக், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி ராமச்சந்திரன், கொமதேக சார்பில் ஈஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிந்தனைச் செல்வன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன் மூர்த்தி, மமக சார்பில் ஜவாஹிருல்லா, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேல்முருகன் உள்ளிட்ட 13 கட்சிகளின் சட்டமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனவாசன் நீட் விலக்கு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.