சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆளுநர் உரையில் அறிவிப்பு
சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்தவும், பிற ஆலோசனைகளை வழங்கவும் மாநிலஅளவில் ஓர் உயர்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆலோசனைக் குழுஅமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.
உறுப்பினர்கள் நியமனம்
பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களில், உயர்நிலை ஆலோசனைக் குழு தலைவராக முதல்வர் ஸ்டாலின், துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு, உறுப்பினராக சுற்றுலா, பண்பாடு, அற நிலையங்கள் துறை செயலர் பி.சந்திரமோகன், உறுப்பினர், செயலராக அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், அலுவல் சாரா உறுப்பினர்களாக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், நீதியரசர் டி.மதிவாணன், சுகி.சிவம், கருமுத்து தி.கண்ணன்,முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், ந.இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜுன் சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேசமங்கையர்க்கரசி ஆகியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
இவர்கள் 3 ஆண்டு காலத்துக்கு இந்த பதவியில் இருப்பார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.