சென்னை: தமிழ்ப் பண்பாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆண்டுதோறும் பொங்கல் மலரை வெளியிட்டு வருகிறது. `பொங்கல் மலர் மலர் – 2022' முதல் பிரதியைத் தமிழ்நாடு தொழில், தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டார்.
மலரை வெளியிட்டு அவர் பேசும்போது, “நம் மண்ணையும், இயற்கையையும் போற்றும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பொங்கல் மலரை வெளியிடுவது பெரும் உவகை அளிக்கிறது.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்பெற்றிருக்கும் நம்பகத்தன்மையையும் தனித்துவமான பார்வையையும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் குறுகிய காலத்திலேயே பெற்றிருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.
பொங்கல் மலரில் புகழ்பெற்றகால்நடைச் சந்தைகள், எழுத்தாளர் சுப்பாராவின் இளவயது மாட்டுப் பொங்கல் அனுபவங்கள், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உள்ள தேசிய உணவுஅருங்காட்சியகம் எனப் பொங்கலின் பல்வேறு அம்சங்கள் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன.
யுவன், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரன்,அனிருத், சந்தோஷ் நாராயணன், ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட இளமைத் துடிப்புமிக்க இசையமைப்பாளர்களின் வளர்ச்சி குறித்து‘சினிமா இசை’ பகுதி சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், உதயசங்கர், சாரதி, ஓவியர் மாரீஸ் ஆகியோர் இலக்கிய ஆளுமைகளாக உருப்பெற்ற விதம் குறித்து அழகுறப் பேசுகிறது ஒரு கட்டுரை. அத்துடன் எஸ்.ராஜகுமாரன், சாளைபஷீர், இ.ஹேமபிரபா ஆகியோரின் மாறுபட்ட கதைகளும் இடம்பெற்றுள்ளன.
மலாலா தொடங்கி யுஸ்ரா மார்தினி வரை உலகின் போக்கை மாற்றிக்கொண்டிருக்கும் 10 இளம்பெண்கள் குறித்து ‘பெருமை மிகு பெண்கள்’ பகுதி பேசுகிறது. ஆன்மிகம் பகுதியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட அம்சங்களைப் பேசியுள்ளன. இவற்றுடன் நூற்றாண்டு காணும் வங்கத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் குறித்த கட்டுரை, எழுத்தாளர் யூமா வாசுகியின் சிறார் கதை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
212 பக்கங்கள் கொண்ட பொங்கல் மலர் ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள `இந்து தமிழ் திசை’ நாளிதழின் முகவர்களிடமும், கடைகளிலும் மலர் கிடைக்கும். https://www.htamil.org/pongal22 என்ற இணையதள முகவரியில்பதிவுசெய்தும் வாங்கிக்கொள்ள லாம்.