சென்னை: தொழிலாளர் நலவாரியத்துக்கு செலுத்த வேண்டிய நல நிதியை வேலையளிப்பவர்கள் வரும் ஜன.31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளர் நலவாரிய செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு தெழிலாளர் நல நிதிய சட்டத்தின்படி நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்போர் பங்காக ரூ.20 சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதிப் பங்குத் தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.
அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை வரும் ஜன.31-க்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதி பங்குத்தொகை உயர்த்துதல் தொடர்பான அரசாணை வெளியிடும் பட்சத்தில் நல நிதி பங்குத்தொகை மற்றும் அதன் அமலாக்க தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஆண்டில் 30 நாட்களுக்குமேல் பணியாற்றிய அனைத்து வகை தொழிலாளர்களுககும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவார். தொழிலாளர் நல நிதி செலுத்தத் தவறினால், சட்டப்படி வருவாய் வரி வசூல் சட்டத்தின்கீழ் அத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, 2021-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதித் தொகையை வரும் ஜன.31-ம் தேதிக்கு முன், ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600006’ என்ற முகவரிக்கு ,‘The Secretary, Tamil Nadu Labour Welfare Board, chennai – 600006’ என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.