சென்னை: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘பொறியியல் புரட்சிகள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.
தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு, அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அந்த வரிசையில், தேசிய அளவில் வளர்ச்சியை கட்டமைத்த அறிவியல் தொழில்நுட்ப நிகழ்வுகள் தொடர்பாக ‘பொறியியல் புரட்சிகள்’ என்ற தலைப்பிலான நூலை டில்லிபாபு எழுதியுள்ளார். தொழில்நுட்ப முயற்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் சந்தித்த சவால்கள், சாதனைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் இன்று (ஜன.8) மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நிகழும் நூல் வெளியீட்டு விழாவில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, எழுத்தாளர் திலகவதி ஐபிஎஸ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
திசையெட்டு பதிப்பகம், ஆளுமைச் சிற்பி மாத இதழ் இணைந்து இந்த நிகழ்வை வழங்குகின்றன. எழுத்தாளர் பிரியசகி, ஆளுமைச் சிற்பி மாத இதழ் ஆசிரியர் மெ.ஞானசேகர் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்கின்றனர். விழா நேரலையை https://youtu.be/W9BoXP_xRWc என்ற வலைதளம் மூலமாக அனைவரும் காணலாம்.