தமிழகம்

கரோனா கட்டுபாடுகள் எதிரொலி: சென்னையில் நாளை 343 மின்சார ரயில்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் நாளை 343 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, வரும் ஞாயிறு (நாளை) முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், ஊழியர்கள் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கமாக இயக்கப்படும் 670 மின்சார ரயில் சர்வீஸ்களில் கணிசமாக குறைக்கப்பட்டு, 343 மின்சார ரயில் சர்வீஸ்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பயணிகளின் எண்ணிக்கையும் குறையும் என்பதால், வரும் ஞாயிறு அன்று மொத்தமுள்ள மின்சார ரயில்களில் சேவையில் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் 113, கும்மிடிப்பூண்டி தடத்தில் - 60, சென்னை கடற்கரை - வேளச்சேரி தடத்தில் 36, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் 120 மின்சார ரயில்களும் இயக்கப்படவுள்ளன. ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ தடத்தில் தலா 2, பட்டாபிராம் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ தடத்தில் தலா 5 சர்வீஸ்கள் என மொத்தம் 343 சர்வீஸ்கள் இயக்கப்படும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், வரும் 9-ம் தேதி (ஞாயிறு) முழு ஊடரங்கு என்பதால், அன்றைய தினம் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT