தமிழகம்

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.213 கோடியில் 313 கிமீ நீள சாலைகள் சீரமைக்கும் பணி: தரத்தை உறுதி செய்ய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: மழையால் சேதமடைந்த 313 கிமீ நீள சாலைகள் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.213 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த சாலைகளின் தரத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி சார்பில் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 1,066 கிமீ நீளமுள்ள 7,132 சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழையால் ஏராளமான சாலைகள் பழுதடைந்தன. அதை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் பல்வேறு திட்டங்களின் கீழ், ரூ.213 கோடியே 15 லட்சத்தில், 313 கிமீ நீளத்தில் 1,654 சாலைகளை அமைக்க ஒப்பம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம் 30-ம் தேதி நள்ளிரவு மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்தபோது, மழையால் பாதிப்படைந்த சாலைப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் விரைந்து முடிக்கவும், அப்பணிகளை உயர் அலுவலர்களைக் கொண்டு நாள்தோறும் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பேருந்து சாலைகள் சீரமைக்கும் பணிகள் இரவு நேரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நாள்தோறும் உயர் அலுவலர்களால் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது.

அண்ணாநகர் மண்டலம், 99-வது வார்டு, 13- வது பிரதான சாலையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை கடந்த 6-ம் தேதி நள்ளிரவு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

அப்போது, பழைய சாலை சரியான அளவில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதா, தார்க்கலவையில் தாரின் சதவீதம் சரியான விகிதத்தில் உள்ளதா, சாலையில் மழைநீர் தேங்காதவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், பணி ஆணையில் குறிப்பிட்டுள்ள அளவில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையின் தடிமன் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும்போது தாரின் வெப்பநிலை 120 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, துணை ஆணையர்கள், வட்டார துணை ஆணையர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், பணி நடைபெற்று வரும் இடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு தரக்கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்யவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷு மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பேருந்து சாலைகள் சீரமைக்கும் பணிகள் இரவு நேரங்களில் நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT