தமிழகம்

2007-ம் ஆண்டுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்ய வேண்டும்: அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பெ.ஜேம்ஸ்குமார்

தாம்பரம்: தமிழகத்தில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு, புதிதாக வார்டு வரையறை செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வார்டு வரையறை செய்தல், வாக்குச்சாவடி மையம் அமைத்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட அனைத்து ஆயத்தப் பணிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு பெற்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல பேரூராட்சிகள், நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. மேலும் தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்யப்படவில்லை.

அரசாணைப்படி ஏற்கெனவே 2007-ம் ஆண்டுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வரையறை செய்ய வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை தற்போதுள்ள அரசு செயல்படுத்தாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது: கடந்த 11.6.1996-ம் தேதி கருணாநிதி முதல்வராக இருந்தபோது வார்டு வரையறை தொடர்பான அரசாணை எண் 135 வெளியிடப்பட்டது. ஆனால் பூந்தமல்லி, திருவேற்காடு, மறைமலை நகர், திருத்தணி, மேல்விஷாரம், ஜோலார்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், 2007-ம் ஆண்டு நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு, உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் புதியதாக வரையறை செய்யப்படவில்லை.

தற்போது பேரூராட்சிகள் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது, உள்ளாட்சி அமைப்புகளில் அரசு விதிப்படி வார்டுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதில் பாகுபாடு ஏன் என்றுதான் தெரியவில்லை.

தற்போது, புதிதாக வார்டு வரையறைசெய்யப்பட்டது குறித்து தாம்பரத்தில் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வரையறை செய்யப்படாமல் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. எந்த அதிகாரியும் இதற்கு பதிலளிக்கவில்லை.

எனவே, தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு வார்டு வரையறை செய்யப்படாமல் உள்ள நகராட்சிகளுக்கு தற்போது உள்ளமக்கள் தொகை அடிப்படையில் வார்டுவரையறை பணிகளை மேற்கொள்ளவேண்டும். அனைத்து மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் சமமாகக் கிடைக்கும் வகையில் அரசு விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும். வரையறை பணி முடிந்தவுடன் தேர்தல்களை நடத்த வேண்டும். ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் மக்கள் தொகை அடிப்படையில் 20 ஆயிரம் வரை உள்ள 21 வார்டுகள், 20 முதல் 30 ஆயிரம் வரை உள்ள 24 வார்டுகள், 30 முதல் 40 ஆயிரம் வரை உள்ள 27 வார்டுகள், 40 முதல் 50 ஆயிரம் வரை உள்ள 30 வார்டுகள், 50 முதல் 60 ஆயிரம் வரை உள்ள 33 வார்டுகள் என வார்டுகள் வரையறை செய்யப்பட்டன. 2007-ம் ஆண்டுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் வார்டு வரையறை செய்யத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT