மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மதுரையில் பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற உள் ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதனால் ஜன.6 முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பில் நடக்க இருந்த பொங்கல் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு நடை பெறுமா என்பது குறித்து அரசு இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை. அதனால் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழா ஏற்பாடுகளை செய்து வரும் குழுவினர் ஆகியோர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் நேற்று நடக்க இருந்தது. இதில் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்தே இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வந்த பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம் என்கிற முடிவில்தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில்தான் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
பார்வையாளர்களுடன் ஜல்லிக் கட்டு நடத்துவதாக இருந்தால் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கும். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். தொற்று பரவி பாதிப்பு அதிகரித்தால் பார் வையாளர்கள் இல்லாமலே ஜல் லிக்கட்டு நடத்தவும் வாய்ப்பு உள்ளது என்றார்.