2018-ம் ஆண்டு பெருவெள்ளத்தில் 2 தூண்கள் அடித்துச் செல்லப் பட்ட கொள்ளிடம் பழைய பாலத்தை முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.3.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக்காவல்- நம்பர் 1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் 12.5 மீ அகலம், 792 மீ நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. பல ஆண்டுகாலம் பயன்பாட்டில் இருந்து வந்த இப்பாலம் வலுவிழந்ததால், இப்பாலத்தில் 2007 முதல் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் கொள்ளிடம் பழைய பாலத்துக்கு மாற்றாக அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, 14.2.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதற்குப்பின் அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தில் சென்று வரத் தொடங்கியதால், பழைய பாலத்தை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர்.
2 தூண்கள் இடிந்து சேதம்
இந்நிலையில், கனமழை காரணமாக 2018 ஆக.16-ம் தேதி கொள்ளிடத்தில் பெருக்கெடுத்த பெருவெள்ளத்தில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 18,19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதன்பின், இப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து அரசுக்கு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, பாலத்தை முற்றிலுமாக அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். ஆனால் அரசு நிர்வாக மட்டத்திலேயே சிலர் இப்பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்றும், 90 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை மறுசீரமைப்பு செய்வது வீண் செலவு என்று வேறு சில ரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் நீண்டகாலமாக கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.
இந்த சூழலில் திருச்சி சிந்தாமணி- திருவானைக்காவல் காவிரி பாலம் வலுவிழந்த விவகாரம் அண்மையில் பெரிதாக உருவெடுத்த நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி கொள்ளிடம் பழைய பாலத்தை முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.3.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இடிக்க முடிவு ஏன்?
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய காலங்களில் புதிய பாலம், பழைய பாலத்துக்கு இடைப்பட்ட பகுதியிலான நீரோட்டத்தில் தேக்கம் மற்றும் சுழற்சி ஏற்பட்டு, அதன் காரணமாக புதிய பாலத்தின் தூண்கள் அமைந்துள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாளடைவில் புதிய பாலம் வலுவிழந்து ஆபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை வரும்.
மேலும், இப்பழைய பாலத்தை அப்படியே வைத்திருந்து காலப்போக்கில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்தால், அருகிலுள்ள புதிய பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும். எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, அடுத்த மழைக்காலம் வருவதற்குள், அதிகபட்சம் 6 மாதத்துக்குள்ளாக இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.