ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் கோயில்களில் வழிபாட்டுக்கு தடை என்ற விதி முறைகள் உடனடியாக அமல் படுத்தப்பட்டுள்ளது.
இரவுநேர ஊரடங்கு காரணமாக வேலூர் கோட்டை பூங்காக்களிலும் பொதுமக்களுக்கு நேற்று காலை முதல் அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நேற்று காலை அனுமதிக்கப்படவில்லை.கோயிலில் வழக்கம் போல் ஆகம பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. மேலும், கோட்டையில் உள்ள அருங்காட்சியகமும் நேற்று காலை மூடப்பட்டது.
அரசு உத்தரவுப்படி 3 நாட் களுக்கு அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கம் போல திங்கள்கிழமை அருங்காட்சியகம் செயல்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கோட்டையின் முன்பாக காவல் துறையினர் மற்றும் தொல்பொருள் துறை ஊழியர்கள் இரும்பினால் தடுப்புகளை அமைத்து, அரசு அலுவலர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சிலர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள், கோட்டை வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு முதல் நடைமுறைக்கு வந்தன.
வெளியூர் மற்றும் தொலை தூரங்களில் இருந்து இயக் கப்படும் பேருந்துகள் இரவு 9.45 மணிக்குள்ளாக பேருந்து நிலையம் வந்தடைந்தன. வெகு தொலைவுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மட்டுமே இரவு நேரங்களில் பேருந்து நிலையத் துக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டுச்சென்றன. இருப்பினும், பேருந்து நிலையத்தில் பயணிகள் இல்லாததால் வேலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங் கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச் சோடியே காணப்பட்டன.
அதேபோல, வேலூர், திருப் பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறு கடைகள், நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்தும் இரவு 9.30 மணிக்கே மூடுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனால், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அத்தியாவசிய தேவைக்காக இயக்கப்பட்ட வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. வேலூர் கிரீன் சர்க்கிள், பேலஸ் கபே, அண்ணாசாலை, ஆரணி ரோடு, ஆற்காடு ரோடு, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம், விருதம்பட்டு, குடியாத்தம் சாலை, திருவலம் சாலைகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேர ஊரடங்கு முதல் நாள் என்பதால் தெரியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டி களை எச்சரித்து அனுப்பினர். விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இரவு நேரத்தில் வெளியே சுற்றி திரிந்தால் வாகனங் கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்தனர்.