வேலூர் காந்திரோடு பாபுராவ் தெருவில் தங்கும் விடுதிகளில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பாபுராவ் தெருவில் தடுப்புகள் அமைப்பு: வேலூரில் வெளிமாநிலத்தினர் வெளியே நடமாட தடை

செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

வேலூர் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் காந்தி ரோடு, பாபுராவ் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் நூற்றுக்கணக்கான வெளி மாநிலத்தினர் மற்றும் வெளி நாட்டினர் தங்கியுள்ளனர். இவர்கள் மூலமாக கரோனா தொற்று அதிகரித்து வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்களுக்கு முதற் கட்டமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் வேலூர் மாநகர சாலைகளிலும், கோட்டை பகுதிகளிலும் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவை யில்லாமல் வெளியே ஆங்காங்கே சுற்றித்திரிவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் காந்தி ரோடு உட்பட 8 இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாநிலங்களை சேர்ந்த யாராவது விடுதியை விட்டு வெளியே வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வேலூர் கோட்டை மற்றும் பூங்காவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. அதேபோல, தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் வெளிமாநிலத்தவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை விடுதிகளிலேயே செய்து கொடுத்து அவர்களை வெளியே நடமாட அனுமதிக்க கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு தேவை ப்பட்டால் விடுதி பணியாளர்கள் மூலம் வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், வேலூர் தனியார் மருத்துவமனைக்கு எதிரே உள்ள பாபு ராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள் சிலருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாபு ராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் வெளியில் வர முடியாதபடி அங்கு தடுப்புகள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் பாபு ராவ் தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து தங்கும் விடுதிகளில் உள்ளவர்கள் வெளியே வராமல் தடுத்தனர். மேலும், அவ் வழியாக செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT