சென்னை: தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கரோனாவைத் தடுக்கின்ற அரண் என்பது தடுப்பூசிதான். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 8.09 விழுக்காடு மட்டும்தான். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 2.84 விழுக்காடு மட்டும்தான். அதாவது முதல் நான்கு மாதங்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் அளவு இவ்வளவுதான்.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த ஏழே மாதங்களில், மக்களுக்குப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக்கொள்வதை மக்கள் இயக்கமாக மாற்றினோம். தற்போது தமிழ்நாட்டு மக்களில் 87.27 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். இரண்டாம் தவணை தடுப்பூசியை 61.25 விழுக்காடு மக்கள் செலுத்தியிருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 8.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஜனவரி 3ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தேன்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கும் மேற்பட்ட எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் “கூடுதல் தவணையில்” தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பூசியைப் பெரும்பாலானவர்களுக்கு செலுத்தியதுதான் காரணம்.
கரோனா வார்டுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். சாலையில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் அணிவித்தேன். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்ற உன்னதமான எண்ணம்தான் இதற்குக் காரணம். உங்களின் அரசாக மட்டுமல்ல; உயிர் காக்கும் அரசாக இந்த அரசு இயங்கி வருகிறது என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமானது" என்று தெரிவித்தார்.