புதுச்சேரி: பிரதமர் மோடி பஞ்சாப் வருகையின்போது பாதுகாப்பு குளறுபடி கண்டிக்கத்தக்கது, முழு பொறுப்பையும் பஞ்சாப் அரசுதான் ஏற்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றது முதல் இதுவரை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.
இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, " நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் குறைந்தவுடன் பிரதமர் மோடியை சந்திப்போம். பிரதமர் மோடியை சந்திக்க பயம் என்பது தவறான குற்றச்சாட்டு. பிரதமர் மோடி மிக மிக நெருங்கிய நண்பர். அவரை விரைவில் கண்டிப்பாக சந்திப்பேன்.
புதுவையில் தேசிய இளைஞர் விழா வரும் 12-ம் தேதி முதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதை பிரதமர் மோடி புதுச்சேரியில் தொடங்கி வைப்பதாக இருந்தது. கரோனாவால் காணொலியில் இவ்விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொலியில் விழாவை தொடங்கி வைப்பார். அந்தந்த மாநிலங்களில் இருந்தபடியே இளைஞர்கள் இந்த விழாவை கொண்டாடுவர்.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்படாமல் குளறுபடி ஏற்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு முழு பொறுப்பையும் பஞ்சாப் அரசுதான் ஏற்க வேண்டும். ஒரு மாநிலத்துக்கு பிரதமர் வரும்போது அதன் முழு பாதுகாப்பையும் மாநில அரசு ஏற்பதுதான் கடமை. பிரதமருக்கு சங்கடத்தை உருவாக்கியது சரியானதல்ல-கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.