தமிழகம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.132.12 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.132.12 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று ராமச்சந்திரன், சின்னதுரை ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலுரைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று பதில் அளித்தார்.

இந்த அரசு விவசாயிகள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிய முதல்வர், பின் குறுவை பருவத்தில் விளைந்த பயிர்கள், சேதமடைந்த முன் பருவத்தில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள், மறு நடவு செலவு, எண்ணெய் வித்துப் பயிர்கள், சிறுதானிய பயிர்கள், கரும்பு பயிர்கள் மற்றும் தென்னைப் பயிர்களுக்கு நிவாரணமாக 1 லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான நிலங்களுக்கு நிவாரணமாக 132 கோடியே 12 லட்ச ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சிறு குறு பெரு விவசாயிகள் 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு அதிகமானோர் பயனடையும் வகையில் இந்த நிவாரண நிதி இரண்டொரு நாள்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசிடமிருந்து பேரிடர் மேலாண்மை நிதி வரவில்லை என்றாலும், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT