திருச்சிக்கு இன்று வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யா கண்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாகப் போதிய மழை பெய்ய வில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத தால் காவிரி டெல்டா பகுதிகளில் 75 சதவீத விளைநிலங்களில் விவசாயம் நடைபெறவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்.
ஆனால் விவசாயக் கடனை வசூல் செய்வதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க ஒவ்வொரு அறுவடை காலத்திலும் வேளாண் ஆணையம் அமைக்க வேண்டும். 58 வயதான விவசாயிகளுக்கு முதியவர் உதவித் தொகை வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
இந்தியாவில் 33 கோடி பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வறட்சியை போக்க வும், விவசாயிகளை காப்பாற்றவும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று (ஏப்.23) திருச்சி வருகிறார். அப்போது அவருக்கு எதிராக அமைதியான முறையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மாநகர் காவல் ஆணையருக்கு 13.4.2016-ல் மனு அனுப்பினோம். இந்த மனுவை போலீஸார் இதுவரை பரிசீலிக்கவில்லை. இதனால் முதல்வர் திருச்சி வரும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.