சென்னை: நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிகவும் அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
கோவையில் செயல்படும் ‘எய்ம்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம், நியூசிலாந்து நாட்டில் செயல்படும் ‘நீர் இணையம்’ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு தழுவிய,மாநில அளவிலான இணையவழி பேச்சுப் போட்டி நடத்துகின்றன.
3 வகைகளில் போட்டி
இந்த போட்டியில் கலந்துகொள்ள வரும் போட்டியாளர்கள் 8 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், 11 முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என 3 வகையாகப் பிரிக்கப்படுவார்கள். மாணவர்கள் பள்ளி, கல்லூரி அடையாள அட்டை அல்லது ஏதாவது ஒரு சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சுஜிதா சமூக ஊடகச் செய்தி பரப்பாளராகவும், கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி தொழில்நுட்பம் சார்ந்த பணிகளைச் செய்யவும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மீடியா பார்ட்னராகவும் செயல்பட உள்ளன.
போட்டியாளர்கள் ‘நீர் வளத்தின் இன்றியமையாமையும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளை 5 நிமிடங்களுக்கு மிகாமல் தமிழில் பேசி, காணொலியில் பதிவு செய்ய வேண்டும். அது 100 மெகாபைட் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பின்னர் கூகுள் படிவத்தில் (Google Form) கேட்கப்பட்டுள்ள விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து பதிவு செய்யப்பட்ட காணொலியை வரும் ஜன.23-ம்தேதி இரவு 10 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பரிசு, சான்றிதழ்கள்
முதல் சுற்றுப் போட்டியில் தேர்வு செய்யப்படும் 100 பேர் 2-வது சுற்றில் கலந்துகொள்ளலாம். கூகுள் மீட் (Google Meet) மூலம் நடத்தப்படும் 2-வது சுற்று போட்டிகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு, பாராட்டிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களை அறியwww.aimngo.com மற்றும் www.neerinaiyam.org ஆகிய இணையதளங்களை காணலாம். 91 8072562423, 91 9443039839 ஆகியஎண்களை தொடர்பு கொள்ளலாம்.