திருப்பூர்:திருப்பூர் மாநகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.பி.என். காலனி பகுதியில், நேற்று காலை சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.ஒரு லட்சம் பணத்தை, அவ்வழியாக சென்ற எல்.ஐ.சி. முகவர் எம்.எஸ்.மணிகண்டன் கண்டெடுத்து, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதாவிடம் ஒப்படைத்தார். எம்.எஸ்.மணிகண்டனின் நேர்மையை கவுரவித்து, காவல் ஆணையர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், மேற்படி தொகையை உரியவர்களை கண்டறிந்து ஒப்படைக்க காவல் உதவி ஆணையர் அனில்குமாருக்கு உத்தரவிட்டார். பணத்தை தொலைத்தவர்கள், உரிய அடையாளங்களை தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம் என்று, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா அறிவித்துள்ளார்.