சென்னை: கரோனா தொற்று பாதித்தவர்களை அழைத்துச் செல்லும் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பாதிப்பு, தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தல், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுதல், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தல், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் வீடுகளில் இருந்து முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக சிறப்பு கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தல், கரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல வசதியாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல இவை பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களை, அவர்களின் இருப்பிடங்களிலிருந்து முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்களுக்கும், பரிசோதனைகளுக்குப் பிறகு கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்களுக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ அழைத்துச் செல்ல ஏதுவாக 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் வரவேற்பைப் பெற்ற இத்திட்டம், பின்னர் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.
மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தற்போது 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் சேவையைப் பெறுவதற்காக 1913 என்ற கட்டணமில்லா எண், 044-25384520 மற்றும் 044-46122300 ஆகிய தொலைபேசி எண்களைப் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.