சென்னை: சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கு தினத்தன்று ட்ரோன்கேமராக்கள் மூலம் கண்காணிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை பெருநகரில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அதிகாரிகள் மற்றும் போலீஸார் அடங்கிய சிறப்புக் குழுக்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அமைத்துள்ளார்.
இந்தக் குழுவினர் தங்களது எல்லைக்கு உட்பட்ட மார்க்கெட், கடற்கரைப் பகுதிகள், கடைவீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், முகக்கவசம் அணியாமல் வரும்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
காவல் சிறப்புக் குழுவினர் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 5,328 வழக்குகள் பதிவு செய்து, ரூ.10 லட்சத்து 65,600 அபராதம் வசூலித்தனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 37 வழக்குகளும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, 61 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் என மொத்தம் 63 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்று அனைத்து சாலைகளிலும் தடுப்பு மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து, கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் ஒத்துழைக்க வேண்டும். அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
மேலும், முழு ஊரடங்கின்போது சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.சென்னை முழுவதும் 500 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காவல் சிறப்புக் குழுவினர் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 5,328 வழக்குகள் பதிவு செய்து, ரூ.10 லட்சத்து 65,600 அபராதம் வசூலித்தனர்.