தமிழகம்

மகளிர், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிஆர்டிசி பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) பேருந்துகளில் மகளிர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் பயணிகள் பாதுகாப்பு மற்றும் டிக்கெட் பரிசோதனை உள்ளிட்டவற்றை கண்காணிக்கலாம் என்பதால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தற்போதுள்ள சூழலில் சாலை போக்குவரத்துக் கழக நிதியில் இருந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் ஒன்று பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் மின்னணு திரைகளை பரிட்சார்த்த முறையில் பொருத்திதர முன்வந்தது. அதற்கு பதிலாக அந்த நிறுவனம் பேருந்து ஓடும்போது நிகழ்ச்சிக்கு இடையே விளம்பரம் ஒளிபரப்பு செய்து கொள்ளலாம். மேலும், இதை தொடர்ந்து பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து சென்னை உள் ளிட்ட நீண்ட தூரம் செல்லும் 6 பேருந்துகளில் கேமரா மற்றும் டிவிக்கள் பொருத்தப்பட்டன.

சாலை போக்குவரத்துக் கழகத்தின் இந்த சேவையை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா, பிஆர்டிசி மேலாண் இயக்குநர் சிவக்குமார், கம்பெனி செகரட்டரி கிஷோர்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக அமைச்சர் சந்திரபிரியங்கா கூறுகையில், ‘‘முதல் கட்டமாக 6 பேருந்துகளில் இச்சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அனைத்து பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அரசுக்கு ஒரு பைசா செலவில்லாமல் இதை கொண்டுவர முயற்சி செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT