பழநி மலைக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம். 
தமிழகம்

தைப்பூச நேரத்தில் தரிசனத்துக்கு 3 நாட்கள் தடை எதிரொலி: பழநி மலைக்கோயிலில் திரண்ட பக்தர்கள்

செய்திப்பிரிவு

தைப்பூச நேரத்தில் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத் துக்கு அனுமதி கிடையாது என்ற அரசின் அறிவிப்பால் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கை யாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழி பாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி யில் தைப்பூசத் திருவிழா ஜன.12 -ல்கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பழநி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பழநி நோக்கி வந்த பக்தர்கள் பாதி தூரம் கடந்த நிலையில், அவர்கள் பழநி வந்தடைய ஒரு நாளுக்கு மேலாகி விடும். அவ்வாறு வந்தாலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. இதனால், மூன்று நாட்கள் காத்திருந்து திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புவது என்பது சிரமமானதாகும். இதனால் பழநிக்கு பாதயாத்திரை யாக நடந்து வந்த பக்தர்கள் பலர் பேருந்தில் ஏறி பழநி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், சபரிமலை சென்று திரும்பும் பக்தர்களும் அதிகம் பேர் பழநி மலைக்கோயிலுக்கு வந்ததால் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் மூன்று தினங்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் நேற்று திரண்டனர்.

வியாபாரிகள் கோரிக்கை

பழநி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் பழநியில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஹரிஹரமுத்து உட்பட சங்க நிர்வாகிகள், கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.12-ம் தேதி முதல் பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக வரத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் தடையால் பழநிக்கு வரும் பாத யாத்திரை பக்தர்கள் சிரமத்துக்குள்ளாவர். இதனாலும், வியாபாரிகள், அவர்களது குடும்பங்களின் நிலையைக் கருதியும் அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் தைப்பூசத் திருவிழா முடியும் வரையிலாவது பக்தர்களுக்கு தடை என்ற கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுப்பதாக, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT