தமிழகம்

ரயில் பாதையோரம் அசுத்தம் செய்வதைத் தடுக்க கோரிய வழக்கு: குடிசை மாற்று வாரியத்தை எதிர் மனுதாரராக சேர்த்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னையில் ரயில் பாதையோரம் பொதுமக்கள் அசுத்தம் செய்வதை தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை எதிர் மனுதாரராக சேர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த எஸ்.பி. சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் இடையே பொதுமக்கள் ரயில் பாதை ஓரங்களில் அசுத்தம் செய்கின்றனர். அங்கு போதிய கழிப்பறை வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தவில்லை. திறந்தவெளியில் அசுத்தம் செய்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. அதனால் ரயில் பாதை ஓரமாக அசுத்தம் செய்வதைத் தடுக்க வேண்டும்” என்று மனுதாரர் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரயில் பாதையோரம் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்ற, தமிழக அரசிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து, ‘‘இந்த வழக்கில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. அதன் தலை வர், அடுத்த விசாரணையின் போது, வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் - வியாசர்பாடி ஜீவா ரயில்நிலையம் இடையே வசிக்கும் பொதுமக்களை மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்” என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT