தமிழகம்

நெல்லையில் 3 செவிலியர் உட்பட 73 பேருக்கு கரோனா - பாத யாத்திரை பக்தர்களுக்கும் இரவு ஊரடங்கு பொருந்தும்: மாநகர காவல் துணை ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 செவிலியர் உட்பட 73 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்கும் இரவு ஊரடங்கு பொருந்தும் என்று திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 54 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரித்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 1,800 பேருக்கு நேற்றுமுன்தினம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 73 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருநெல் வேலி மாநகர பகுதிகளில் மட்டும் செவிலியர் விடுதியில் 3 பேர் உட்பட 37 பேருக்கு பாதிப்பு உள்ளது.

வட்டார அளவில் அம்பாசமுத்திரத்தில் 8 பேர், பாளையங்கோட்டையில் 7 பேர், ராதாபுரத்தில் 5 பேர், மானூரில் 4 பேர், பாப்பாக்குடி, வள்ளியூர், சேரன்மகாதேவியில் தலா 3 பேர், களக்காட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதயாத்திரை பக்தர்கள்

இதனிடையே பாதயாத்திரை பக்தர்களுக்கும் இரவு ஊரடங்கு பொருந்தும் என்று திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். மாநகரச் சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு பேரிகார்டுகள் மூலம் அடைக்கப்படும். இரவு நேர கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை வாங்க செல்வோர் தங்கள் இருப்பிடத்தின் அருகிலுள்ள கடைகளிலேயே வாங்கி கொள்ள வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும். இரவு 10 மணிக்குமேல் அமல்படுத்தப்படும் ஊரடங்கு அவர்களுக்கும் பொருந்தும். மாநகர பகுதிகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். கடந்த ஒருவாரத் தில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT