தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்திருந்தது. தினசரி பாதிப்பு ஒன்றிரண்டு என்ற எண்ணிக்கையிலேயே இருந்து வந்தது. மக்கள் அச்சம் நீங்கி இயல்புநிலைக்கு திரும்பினர். கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் 100-ஐதாண்டியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர், மாநகராட்சி இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மாநகராட்சி அலுவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, காவல் துறையினர் ரூ.200 அபராதம் வசூலிக்கின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள புதியகட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இரவு நேரஊரடங்கை தொடர்ந்து மாவட்டம்முழுவதும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொது இடங்களுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சானிடைசர் மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.