கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், காய்கறி மற்றும் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், முகக் கவசம் அணியாத நபர்களிடம் முகக்கவசம் வழங்கியும் மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, “நமது நாட்டில் 3-வது அலையாக கரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடை வெளியை கடைபிடிக்க வேண் டும். முகக்கவசம் அணியாத வர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். கரோனா தொற்று பரவல் நெறிமுறைகளை கடைபிடித்து, கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத் தில் முதல் தவணை தடுப்பூசியை 90 சதவீத மக்களும், 2-வது தவணை தடுப்பூசியை 67 சதவீத மக்களும் செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று பரவினாலும், அவர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் 72 சதவீதம் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளோம். மீதமுள்ள 28 சதவீத சிறுவர்களுக்கு ஓரிரு நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும்’’ என்றார்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.