மதுரை: 'ஓட்டுக்கு பணம் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க வேண்டும்' என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீது பதிவான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நெல்லையில் 2016-ல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, வாக்காளர்களை வாக்களிக்க பணம் வாங்குமாறு தூண்டிதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீது நெல்லை டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பிரேமலதா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் வாங்க வேண்டும் என மக்கள் மத்தியில் பேசியதாக போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்' என அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அவ்வாறு பேசவில்லை. பணத்தின் வலிமையைக் காட்டும் விதமாகவும், வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது'' என நீதிபதி
கூறியுள்ளார்.