தமிழகம்

பொம்மை உற்பத்தியில் சுயசார்பு இலக்கை நெருங்கும் இந்தியா

எஸ்.ஜி.சூர்யா

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களான பொம்மைகளுக்கு பின் மறைந்துள்ள பொருளாதாரம் மிகப் பெரியஅளவிலானது. அதன் உலகளாவிய சந்தை மதிப்பு ஆண்டுக்கு 7 லட்சம் கோடி அமெரிக்கடாலராக (இந்திய மதிப்பில் ரூ.526 லட்சம் கோடி) இருக்கிறது. அதில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு சதவீதம்கூட இல்லை. மேலும், இந்தியாவில் பொம்மை விற்பனை ஆண்டுக்கு ரூ.5,750 கோடியாக உள்ளது. அவற்றில் சுமார் 85 சதவீதம் பொம்மைகள் சீனா, ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையை மாற்றி உலக பொம்மைகள் உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும், உள்நாட்டு பொம்மைகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவரது மாதாந்திர ‘மனதின் குரல்’ உரையில் பேசினார். அதற்கேற்ப உள்நாட்டில் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய அரசால் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் வெளிநாட்டில் இருந்துஇறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கான வரியை 20 முதல் 60 சதவீதம் வரை உயர்த்தி, தரக் கட்டுப்பாட்டு விதிகளையும் மத்திய அரசு கடுமையாக்கியது. மேலும், பதிவு செய்துள்ள 8,366 சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு உதவிகளைவழங்கி, புதிதாக தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப் பட்டன.

இதுதவிர ஆத்ம நிர்பார் பாரத் திட்டம்,இந்திய பொம்மை கண்காட்சி, டாய்கேத்தான் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. அதன்விளைவாக பொம்மை தயாரிப்பில் உள்நாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவது வெகுவாக அதிகரித்துள்ளது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐஎம்ஆர்ஏசி-யின் ஆய்வின்படி 2020-ம் ஆண்டு இந்திய பொம்மை தொழிலின் சந்தை மதிப்பு 123 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. இது அடுத்த 5 ஆண்டில் 12 சதவீதம் கூடுதல் வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் வெளிநாடுகளில் இருந்து பொம்மைகள் இறக்குமதி செய்வது குறைந்துள்ளது. அதாவது, 2019-ம் ஆண்டு 371 மில்லியன் டாலர்களாக இருந்த பொம்மை இறக்குமதி, 2020-ல் 343 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 129.63 மில்லியன் டாலர்கள்அளவுக்கே பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பொம்மை இறக்குமதியானது தற்போது 76 சதவீதம் வரை குறைந்துள்ளது.

தொடர்ந்து இந்தியாவில் பொம்மை உற்பத்திக்கென பிரத்யேக சிறப்பு மையம் கர்நாடக மாநிலத்தின் கோப்பாலா பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.5,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 40,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதில் இருந்து தயாரிக்கப்படும் பொம்மைகள் உலக நாடுகளுக்குஏற்றுமதி செய்யும் அளவுக்கு நவீனமுறையிலும் உயர்தரத்திலும் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை மூலம் இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்குள் சுமார் ரூ.2,300 கோடிமதிப்பிலான பொம்மை சந்தையை உருவாக்க முடியும். ஆண்டுதோறும் சராசரியாக 18 சதவீதம் வளர்ச்சியை அடைய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சுற்றுச்சூழலுக்கு கேடான வெளிநாட்டு பொம்மைகளை தவிர்த்து தரமான இந்திய தயாாிப்புகளை வாங்குவதற்கு பொதுமக்களும் முன்வர வேண்டும். அதுநம்நாட்டின் தொழில்துறைக்கும், பொருளாதாரத்துக்கும் நல்லது. பொம்மை உற்பத்தியில் சுயசார்பை நெருங்கிவிட்ட சூழலில், பிரதமர் மோடி கூறியது போல உலகின் மையமாக இந்தியா மாறுவதும் வெகு தொலைவில் இல்லை.

SCROLL FOR NEXT