கெயில் நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்), கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு 871 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கெயில் நிறுவனத்தின் திட்டத்தால், பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்காதது வேதனை அளிக்கிறது. இந்த திட்டத்துக்கு 2006-ல் அமைந்த திமுக அரசு 2008-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி அனுமதி அளித்தது. 2011-ல் அமைந்த அதிமுக அரசு அதனை செயல்படுத்தியது. நிறைவேற்றப்பட்டது.
கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. இது தமிழக அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. கெயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதற்கு மத்திய-மாநில அரசுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.