தமிழகம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக மின் வசதிக்காக காத்திருக்கும் வன கிராம மக்கள்

எஸ்.கோபு

ஆனைமலை காடுகளின் பூர்வ குடிகளான காடர் இன மக்கள், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தவித்து வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட, உலாந்தி வனச்சரகத்தில் பரம்பிக்குளம் செல்லும் வழியில், எருமைபாறை வன கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 30-க்கும் அதிகமான காடர் குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர். தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் என தங்கள் வாழ்க்கைச் சூழலை அமைத்துக்கொண்டு, காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த காடர்கள், ஆங்கிலேயர் காலத்தில் வளர்ப்பு யானை பராமரிப்பு, தேக்கு மரக்கன்று நடுதல், வனத்தில் தீ தடுப்பு உள்ளிட்ட வனத்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொண்டனர்.

காலங்கள் கடந்தாலும் இன்று வரை பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளிலும் பாரம்பரிய இசை, நடனம், வழிபாட்டு முறை என தங்களது கலாச்சாரத்தை கடைபிடித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக காடுகளில் வசித்துவரும் இவர்களுக்கு இன்று வரை அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை.

சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், காடுகளில் விலங்குகள் பருகும் ஊற்றுகளில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்புக்கு அருகிலேயே மின்கம்பிகள் சென்றாலும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இன்னும் மின்வசதி கிடைக்கவில்லை. மண் சுவரும், மண்ணெண்ணெய் விளக்கும் மட்டுமே இன்று காடர்களுக்கு துணையாக உள்ளது. அரசின் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படும் எருமைபாறை காடர் கிராம மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, காடர் பழங்குடியின மக்கள் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

காடர் இனத்தில் இளம் பெண்கள் பூப்படைந்தாலும், மாதவிடாய் நாட்களிலும் வீடுகளில் தங்காமல், தொலைவில் அமைக்கப்பட்டு இருக்கும் ‘எத்தாபட்டி’ என்னும் குடிசையில் எந்த அடிப்படை வசதி இல்லாமலும், விலங்குகளுக்கு பயந்தும் 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளாக குடியிருப்புகளுக்கு மின்வசதி கேட்டு வருகிறோம். குடியிருப்பு அருகிலேயே மின் கம்பங்கள் அமைத்து சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்கின்றனர். நீண்டகாலமாக போராடியும் இதுவரை எங்களுக்கு மின்வசதி செய்து தரவில்லை. மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் படிப்பதற்கு மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகிறோம்.

மூங்கில் மற்றும் மண்ணை கொண்டு சுவர் அமைத்து வசித்து வருகிறோம். மழை நேரங்களில் மண்சுவர் கரைந்து சாயும் நிலை ஏற்படுகிறது.

சோலார் ஆழ்குழாய் கிணறும் பழுதடைந்து விடுவதால், குடிநீர் எடுப்பதற்காக வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் உள்ள ஊற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியள்ளது. பள்ளி குழந்தைகளும் மூன்று கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. வனத்துறையினரும், வருவாய்துறையினரும் அடிக்கடி வந்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து செல்கின்றனர். ஆனால் இதுவரை எந்த அடிப்படைவசதியும் செய்து தரவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT