கோப்புப் படம் 
தமிழகம்

பிரதமர் மோடியின் தமிழக வருகை எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: இ.கம்யூ. தேசிய பொதுச்செயலர் டி.ராஜா கருத்து

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் டி.ராஜா கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் வரும் 26 முதல் 28-ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் அக்டோபரில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்கவுள்ளது. இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை பாஜக அரசு செய்து வருகிறது.

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய பாஜக அரசு தகர்த்து வருகிறது. பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள், நமது பொருளாதாரத்தை கார்ப்பரேட்களிடம் தாரைவார்க்கும் விதமாக உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உச்ச நிலையில் உள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு குறித்து நாங்கள் பேசியுள்ளோம். இரு கம்யூனிஸ்ட்களும் இணைந்தால் வாக்கு வங்கி சதவீதம் மேலும் அதிகரிக்கும்.

இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். தற்போது, சீனா பான்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக, பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT