நகை கடை உரிமையாளர்கள் 18 நாட்களுக்கு பிறகு நேற்று முன் தினம் கடைகளை திறந்ததால், மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், ஒரே நாளில் 50 சதவீதம் நகை விற்பனை அதிகரித்துள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும். இதை கண்டித்து நகை கடை உரிமையாளர்கள் நாடுமுழுவதும் கடந்த 2-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடத்தினர். நாடுமுழுவதும் 2 லட்சம் நகை கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் சுமார் 35 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. இதனால், திருமணம் போன்ற முக்கிய விசேஷமான நாட்களில் நகை வாங்க செல்வோர், அவசரத்துக்கு நகை விற்போர், நகை சீட்டு பணம் கட்டும் மக்கள் உட்பட பலரும் அவதிப்பட்டனர்.
இதற்கிடையே, மத்திய அரசுடன் நகை கடை உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் காலை முதல் நாடுமுழுவதும் கடைகள் திறக்கப்பட்டன.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரியை கண்டித்து நாங்கள் 18 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதால், போராட்டத்தை வாபஸ் பெற்றோம். நேற்று முன்தினம் காலை முதல் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டன. காலை முதல் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. வழக்கத்தை விட 50 சதவீதம் வர்த்தகம் அதிகமாக இருந்தது. மேலும், அடுத்த சில நாட்களுக்கும் வர்த்தகம் கணிசமாக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.