தமிழகம்

புதுச்சேரியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல்கள் இருந்தால் அவமதிப்பு வழக்கு தொடரலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல்கள் இருந்தால் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி கரிக்காலம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகந்நாதன் மற்றும் புதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமைக்கட்சி அமைப்பாளர் தர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, புதுச்சேரியில் கடந்த டிச.31 இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானங்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டு இருந்தனர்.

மேலும் 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், திரைப்பட பிரபலங்களை பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது புதுச்சேரி கடற்கரை சாலையில் அளவுக்கு அதிகமானோர் குழுமியி ருந்தனர். புதுச்சேரி அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள், பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் உள்ளன. வழக்கு நடைபெற்ற தினத்தன்று புதுச்சேரியில் 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், புத்தாண்டு நிகழ்ச்சிகள் முடிந்து விட்டதால் இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். அதேநேரம் புத்தாண்டு தினத்தன்று விதிமீறல்கள் நடந்திருந்தால் அதுதொடர்பாக மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரலாம், என அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT