ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம். 
தமிழகம்

ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையம் வட்ட மருத்துவமனையாக தரம் உயருமா?

செய்திப்பிரிவு

ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அந்த ஊரில் கடந்த 1916-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அரசு மருந்தகம் அமைக்கப்பட்டது. பின்னர் 1956-ம் ஆண்டு ஜில்லா போர்டு நிதியில், உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இதற்கான கட்டிடம் கட்டப்பட்டது.

பின்னர், அதிமுக ஆட்சியின் போது அது சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தோர் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து மகப்பேறு, குழந்தைநலம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம், முண்டியம்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் வந்த திமுக ஆட்சியின் போது தற்போதைய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் முயற்சியால் தரம் உயர்த்தி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. 30 படுக்கை வசதியுடன் இசிஜி, ஸ்கென் அமைக்கப்பட்டு கர்ப்பிணி பெண்கள் இங்கேயே பரிசோதனை செய்ய அப்போது ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது ஸ்ரீமுஷ்ணம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரு கட்டிடங்களில் பழுது ஏற்பட்டு பயன்பாடியின்றி உள்ளது.

கடந்த ஆட்சியின் போது அமைக்கப்பட்ட புறநோயாளிகள் கட்டிடமும் பழுதடைந்துள்ளது. இதனால் நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற முடியவில்லை.

30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட கட்டிடத்தில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் பணிபுரிவதோடு, கிராம சுகாதார செவிலியர்களும் வந்து செல்கின்றனர். பழுதடைந்த கட்டிடங்களை முழுமையாக அகற்ற வேண்டும், புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும், முஷ்ணம் தனி வட்டமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT